
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர அதிரடி தான். கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, அசால்ட்டாக சிக்ஸரை விளாசி வெற்றியை தேடி கொடுத்தார். மொத்தமாக 17 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை குவித்தார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் மூலம் முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே போட்டியில் 30 + ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார். யுவராஜ் சிங் 2 முறை இதனை செய்திருந்த சூழலில் ஹர்திக் பாண்டியா 3 முறை செய்திருந்தார்.