
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்துவீச்சில் குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் டேவிட் மில்லர் – ராசி வேன் டெர் டுஷன் ஆகியோரை அவுட் செய்ய தவறியதுடன் மோசமாக பந்து வீசி ரன்களை வாரி வழங்கியது.
அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே தலைகுனியும் நிலைமைக்கு உள்ளாகி 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுப்பதால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 3 டி20 தொடர்களில் ரோகித் தலைமையில் ஒரு தோல்வியைக் கூட பதிவு செய்யாத இந்தியா 9 தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியது. அதனால் வழக்கம்போல சொந்த மண்ணில் கில்லியாக ராஜநடை போட்டு வந்த இந்தியாவுக்கு இந்த தோல்வி ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.