
செஞ்சுரியனில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தின் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் வங்கதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 48 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரை 2-1 என வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது வங்கதேச அணி. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
டஸ்கின் அஹ்மதுக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன. கடந்த 20 வருடங்களில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி தோற்றதே இல்லை.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் இத்தொடரில் மோசமாக விளையாடியதற்கு ஐபிஎல் போட்டியும் ஒரு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரபாடா, மார்க்ரம் போன்ற தெ.ஆ. வீரர்கள் அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் போட்டியில் விளையாட நேராக இந்தியாவுக்கு வருகிறார்கள் . இதனால் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.