
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்கள் பலருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்த இளம் இந்திய அணி எவ்வாறு அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை சமாளிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பையில் நடைபெற உள்ளதால் இந்த தொடரானது தற்போது அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரீட்ச்சையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.