
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக துவங்குகிறது. அதன்படி மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக தீவிர வலை பயிற்சிக்குப் பின் அனைத்து அணிகளும் தயாராகி உள்ளன. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
இப்போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி, திடீரென அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டி துவங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவரின் இந்த அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது.
ஏனெனில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமான அவர் அதன்பின் இன்றுவரை அந்த அணியின் முதுகெலும்பாகவும் இதயமாகவும் கருதப்படுகிறார். இந்தியாவிற்காக உலக கோப்பையை வென்று கொடுத்தது போலவே தனது மேஜிக் நிறைந்த அபார கேப்டன்ஷிப் வாயிலாக இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2ஆவது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.