யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: ஸ்ரீசாந்த் பந்துவீச்சு வீண்; மோர்ஸ்விலேவை வீழ்த்தியது டெக்ஸாஸ்!
மோர்ஸ்விலே யுனிட்டிக்கு எதிரான டி10 லீக் போட்டியில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 லீக் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் தொடர்களில் அணிகளை வாங்கி உள்ள இந்திய முதலாளிகள் வாங்கி இருந்தார்கள். முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்தத் தொடர் முடிந்த சூட்டோடு தற்பொழுது அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோர்ஸ்விலே யுனிட்டி - டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Trending
இதில் டாஸ் வென்ற மோர்ஸ்விலே அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிக்கு டேரன் ஸ்டீவன்ஸ் 18 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 36 ரன்கள் எடுத்தார். பத்து ஓவர்கள் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது.
இப்போட்டியில் மோர்ஸ்விலே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் சேர்த்தார். அவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், முக்தார் அகமத், உபுல் தரங்கா, டேரன் ஸ்டீவன்ஸ் என 12 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வெறும் 12 ரன்கள் கொடுத்து வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மோர்ஸ்விலே அணியில் தொடக்க வீரர்கள் பார்த்தீவ் படேல், கிறிஸ் கெயில் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஷெஹன் ஜெயசூர்யா 22 ரன்களையும், பியனார் 6 ரன்களுக்கும், கோரி ஆண்டர்சன் 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க,மோர்ஸ்விலே யுனிட்டி அணி 10 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. எதிரணி தரப்பில் முகமது ஹபீஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மோர்ஸ்விலே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now