Advertisement

இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது - கேன் வில்லியம்சன் 

பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தோம். ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டனர் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 02, 2022 • 11:41 AM
They were clinical, says New Zealand captain Kane Williamson after loss against England
They were clinical, says New Zealand captain Kane Williamson after loss against England (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பிரிஸ்பேனில் நடந்த போட்டி ஒன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். 

ஹேல்ஸ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பட்லர் 8 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை, வில்லியம்சன் அந்தரத்தில் பறந்து பிடித்தபடி பந்தை நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பட்லர் தன்னை நங்கூரம் போல் நிலைநிறுத்தி ரன்கள் சேகரித்தார். அணியின் ஸ்கோர் 81 ஆக உயர்ந்த போது ஹேல்ஸ் 52 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Trending


பட்லர் தனது பங்குக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ரன்-அவுட் ஆனார். பின்வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன் 20 ரன்களை எடுத்து கணிசமான பங்களிப்பை வழங்கினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.

அடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்துக்கு கான்வே 3 ரன்னிலும், ஃபின் ஆலன் 16 ரன்னிலும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சனும், கிளென் பிலிப்ஸும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டாலும் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் நெருக்கடி வளையத்தில் சிக்கினர். அதில் இருந்து அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.

வில்லியம்சன் 40 ரன்னிலும் , பிலிப்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 

போட்டி முடிவுக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில்,  “நாங்கள் 160-165 ரன்கள் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதையும் தாண்டி 179 ரன்களை எட்டியது நல்ல ஸ்கோர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றோம். அதனால் தான் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன்” என்றார்.

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், “எங்களை நெருக்கடிக்குள்ளாக்கி இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. எல்லா பாராட்டுகளும் அவர்களையே சாரும். இந்த ஸ்கோர் கொஞ்சம் அதிகம் தான். பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தோம். ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டனர்” என்றார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement