
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் இந்திய அணி 9 மைதானங்களில் 9 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அணிகளும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்கு முன் சில பயிற்சி போட்டிகளில் அனைத்து அணிகள் பங்கேற்க உள்ளன. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 10 பயிற்சி போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளன. அதேபோல் பயிற்சிப் போட்டிகளுக்கான மைதானங்களாக கவுகாத்தி, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.