ஐபிஎல் 2021: ஆர்சிபி -யில் இணையும் சிங்கப்பூர் வீரர்!
ஐபிஎல் தொடருக்காக முதன் முதலாக சிங்கப்பூரில் இருந்து இளம் வீரரை களமிறக்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஐபிஎல் 14ஆவது சீசனின் 2ஆம் பகுதி போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில் தற்போது அணி வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Trending
அதன்படி விராட் கோலி தலைமையிலான அணியில் இருந்து ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க புதிதாக சிங்கப்பூர் அணியை சேர்ந்த டிம் டேவிட் எனும் இளம் வீரரையும் ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் தேசிய அணியைச் சேர்ந்த ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
டிம் டேவிட், சிங்கப்பூர் அணிக்காக இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 558 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 46.50 ரன்கள் ஆகும். மேலும் அவரின் ஸ்டரைக் ரேட் 158.52 ஆகும். சிங்கப்பூர் அணிக்காக நேபால், ஹாங்காங், உள்ளிட்ட அணிகளை எதிர்த்து அவர் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அங்கு உள்நாட்டு தொடரான பிக் பேஸில் அதிரடி காட்டி கவனம் பெற்றார். 2020 - 2021ஆம் ஆண்டுக்கான பிபிஎல் தொடரில் அவரின் அதிரடி தொடக்கம் அனைவருக்கு பிடித்திருந்தது. இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது. டிம் டேவிட்டும் வாய்ப்புக்காகவும் காத்துக்கொண்டுள்ளார்.
இந்த சூழலில் தான் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி அவரை ஐபிஎல் தொடருக்கு அழைத்து வந்துள்ளது. டிம் டேவிட்டின் ஆட்டம் குறித்து இந்திய வீரர்கள் பலருக்கும் தெரியாததால், தொடக்கம் முதலே அவரின் அதிரடியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
மேலும் நடப்பு சீசனில் ஆர்சிபி அணி தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now