டிஎன்பிஎல் 2021: மழையால் கடுப்பான ரசிகர்கள்; இரண்டாவது போட்டியும் ரத்து!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கோவை - சேலம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
Trending
அதன்படி திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் வீசினார். அவர் வீசிய 2ஆவது பந்திலேயே தினேஷ் டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்த ஓவரில் சித்தார்த் ஒரு ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் வந்த வேகம் தெரியாமல் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். மேலும் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சதீஷ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்பூர் அணியை நிர்மூலமாக்கினார்.
இதனால் 16 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
அதன்பின்னரும் மழை நீடித்த காரணத்தில் இப்போட்டியும் கைவிடப்பட்டதாக போட்டி நடுவர்கள் அறிவித்து, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி என வழங்கினர். நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now