
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 2-ஆம் தேதியான நேற்று உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் மூத்த நட்சத்திரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மாட்டி போட்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து கடும் நெருக்கடி கொடுத்தனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் டாம் லாதம் 1, வில் யங் 1, கேப்டன் கேன் வில்லியம்சன் 2, டேவோன் கான்வே 3 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.