Advertisement

யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அயர்லாந்து அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 25, 2024 • 22:02 PM
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய 19 அணியை எதிர்த்து, அயர்லாந்து அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தியது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷினி குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதார்ஷ் சிங் 17 ரன்களிலும், அர்ஷினி குல்கர்னி 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்ன இணைந்த முஷீர் கான் - கேப்டன் உதய் சஹாரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Trending


தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 156 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் உதய் சஹாரன் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தினார். 

அதன்பின் 9 பவுண்டரி, 4சிக்சர்கள் என 118 ரன்கள் எடுத்த நிலையில் முஷீர் கான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆரவல்லி அவனீஷும் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளைக் இழந்து 301 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டுகளையும், ஜான் மெக்னலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோர்டன் நெய்ல் - ரியான் ஹண்டர் இணை தொடக்கம் கொடுத்தன. இதில் ஜோர்டன் நெய்ல் 11 ரன்களுக்கும், ஹண்டர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கியான் ஹில்டன் 9 ரன்களுக்கும், கேப்டன் பிலிப்பஸ் லே ரூக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ஸ்காட் மெக்பாத் 2 ரன்களுக்கும், மக்டாரா காஸ்கிரேவ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து நமன் திவாரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜான் மெக்னலி, கார்சன் மெக்கல்லோ, ஆலிவர் ரிலே, ஃபின் லட்டன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளையும், சௌமி பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அண்டர் 19 அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அண்டர் 19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இத்தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முஷீர் கான் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement