
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், வங்கதேச அணிக்கு எதிராக தங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு சாதனையும் படைத்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ஹஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் கேப்டன் மோனாங்க் படேல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஸ்டிவன் டெய்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.