
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்க அணி. தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 76 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தார்கள்.
அதன்பின் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 11-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி.
ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் மில்லரும் வாண் டர் டுசெனும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். டுசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.