
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடருக்கு பின்னர் அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியும் தங்களது வீரர்கள் பட்டியலை இந்த மாத துவக்கத்தில் அறிவித்தது.
அதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முக்கிய வீரராக இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வருன் சக்ரவர்த்தி அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமானார்.
பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் தனது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருன் சக்ரவர்த்தி நிச்சயம் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வருன் சக்ரவர்த்தி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுக்கும் இவரது பந்துவீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு முக்கிய ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.