பகலிரவு டெஸ்டில் சதமடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் குயிண்ட்ஸ்லேண்டில் நேற்று தொடங்கியது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2ஆவது பகலிரவு டெஸ்ட்.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 51 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மந்தனா. 2013க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. 25 ஓவர்கள் வரை தொடக்கக் கூட்டணி நீடித்தது.
Trending
அதன்பின் ஷஃபாலி அளித்த மூன்று கேட்சுகளை ஆஸி. வீராங்கனைகள் தவறவிட்டார்கள். ஆனால் 26-வது ஓவரின் முதல் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா. முதல் விக்கெட்டுக்கு மந்தனாவும் ஷஃபாலியும் 93 ரன்கள் சேர்த்தார்கள்.
முதல் நாளன்று மழை பெய்ததால் ஆட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இந்திய மகளிர் அணி 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. மந்தனா 80, பூனம் ராவத் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்தார் மந்தனா. 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைத்தார்.
மேலும், வெளிநாடுகளில் சதமடித்த 5ஆவது இந்திய வீராங்கனை - மந்தனா. தொடர்ந்து நன்கு விளையாடி 126 ரன்கள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றார். பிறகு 127 ரன்களில் கார்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மந்தனா - ராவத் கூட்டணி 2ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதையடுத்து தற்போதுவரை இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now