
ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இந்த தொடர் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் 7ஆவது டி20 உலக கோப்பை தொடரானது அங்கேயே நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது என்றே கூறலாம். அதன்படி கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இழந்து தவித்து வந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ராகுல், ரோஹித், விராட் கோலி ஆகியோரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் தற்போது பலமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் இஷான் கிஷன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடைய அதிரடி காரணமாக மும்பை அணி 235 ரன்கள் குவித்தது.