லார்ட்ஸ் டெஸ்ட் : அஸ்வின் இடம்பெறாதது குறித்து கோலியின் விளக்கம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடாத அஸ்வின், லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்டிலாவது அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டிகான பிளேயிங் லெவனிலும் அஸ்வின் இடம்பெறவில்லை.
இதற்கு காரணம் இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சுக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே எல்லா அணிகளும் களமிறங்கும். அதிகபட்சமாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளலாம்.
Trending
முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கோலி கூறியதாவது “இந்தத் தொடரில் இதே பந்துவீச்சுக் கூட்டணியுடன் தான் (4 வேகப்பந்து வீச்சாளர்கள் + ஒரு சுழற்பந்துவீச்சாளர்) விளையாட வாய்ப்புள்ளது. அதேநேரம், சூழலுக்கு ஏற்றாற்போல அணியில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய பலம். இந்தப் பந்துவீச்சுக்கூட்டணிதான் முன்னேறிச் செல்ல சரியாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் காரணங்களால் அஸ்வினுக்காக வாய்ப்புகள் குறைந்துவிடுமா, இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது அஸ்வின் விளையாடுவாரா என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டிலும் அஸ்வின் இடம்பெறவில்லை.
இதுகுறித்து டாஸ் நிகழ்வின் போது பேசிய விராட் கோலி,“ஆட்டத்துக்கு முந்தைய 12 பேரில் அஸ்வினும் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடுகளத்தைப் பார்த்த பிறகு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதே அணிக்குச் சரியாக இருக்கும் எனத் தோன்றியது” என விளக்கமளித்துள்ளார்.
எனினும் இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பெறாததற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கோலிக்கு எதிரான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now