
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, குரூப்-2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தொல் தோல்வியடைந்தது.
இவ்விரு மோசமான தோல்விகள் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பை தகர்த்தது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்திய அணி விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
இருப்பினும் அடுத்த இரு லீக் ஆட்டங்களில் ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை பந்தாடி ரன்ரேட்டிலும் ஏற்றம் கண்டதால் இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு எட்டிப்பார்த்தது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இந்திய அணி, ஸ்காட்லாந்தை 85 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 6.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. ரன்ரேட் உயர்ந்தாலும் இந்திய அணி மற்ற ஆட்டங்களின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டது.