
அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்தியா அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் சமீபத்திய ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்தியாவை வழி நடத்துகிறார்.
அவரது தலைமையில் பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் ஐபிஎல் தொடரில் அசத்திய ராகுல் திரிப்பாதி, சஞ்சு சாம்சன் ஆகியோருடன் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் அயர்லாந்தை எதிர்கொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியில் மொத்தமாக வாய்ப்பை இழந்து நின்ற ஹர்திக் பாண்டியா இன்று கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளது அவரின் கடின உழைப்பை காட்டுகிறது. கடந்த 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தனது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையால் 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக அசத்தினார்.