இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் என சீனியர் வீரர்கள் அனைவருக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பந்த் இந்த தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணியில் அதிகமான இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இரண்டு போட்டியிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
Trending
இந்திய அணி கடந்த இரண்டு போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாஃபர், அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல், கடந்த இரண்டு போட்டியிலும் மிக மோசமாக பந்துவீசினார். டி.20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மிடில் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்தி விக்கெட் வீழ்த்த தவறிவிட்டால் கடைசி ஐந்து ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் கொடுக்கும் நிலையே ஏற்படும்.
இது தான் கடந்த இரண்டு போட்டியிலும் நடந்தது, சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறிவிட்டனர். குறிப்பாக அக்ஷர் பட்டேலின் பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை, எனவே அக்ஷர் பட்டேலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு இடம் கொடுப்பதே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now