ஐபிஎல் 2022: நடுவர் நோ-பால் கொடுக்காததால் பேட்ஸ்மேன்களை அழைத்த ரிஷப் பந்த்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்தாலும், கடைசி ஓவரில் நோபால் கொடுக்காததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜாஸ் பட்லரின் காட்டடி சதம்(116), படிக்கலின் அரைசதம்(56) ஆகியவற்றால் 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. 223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரோமென் பாவெல், குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மெக்காய் கடைசி ஓவரை வீசினார்.
Trending
மெக்காய் வீசிய முதல் மூன்று பந்துகளையும் ரோவ்மன் பாவல் சிக்சருக்கு விளாசி அசத்தினார். அதிலும் 3ஆவது பந்தை மெக்காய் ஃபுல்டாஸாக பாவெல் இடுப்பு உயரத்துக்கு வீசினார், அதையும் ஓவர் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பாவல் பறக்கவிட்டார்.
ஹாட்ரிக் சிக்ஸர் அடித்ததால், அடுத்து 18 ரன்கள்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. பாவெல் இடுப்புவரை வீசப்பட்டதால் இதற்கு நடுவர் நிகில் மேனனிடம் நோ-பால் கோரினார். ஆனால், கள நடுவர் மேனன் நோபால் தரவில்லை. ஆனால் டக்அவுட்டில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியினர் அனைவரும் நடுவர் நோபால் தராததற்கு அதிருப்தி தெரிவித்து, நோபால் வழங்கக் கோரி சைகை செய்தனர். ஆனால், நடுவர் இடுப்பு மேல் செல்லவில்லை அதனால் நோபால் தரமுடியாது என்றார்.
இதனால் சிலநிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு, குல்தீப் யாதவ், நடுவர்கள் நிகில் மேனன், பட்வர்தன் ஆகியோரிடம் நோபால் கோரினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், களத்தில் இருந்த ரோமென் பாவல், குல்தீப் யாதவை விளையாடியது போதும் திரும்பவாருங்கள் என்று சைகையால் பெவிலியனுக்கு அழைத்தார்.
நடுவரின் தவறான தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்து வீரர்களை ரிஷப் பந்த் திரும்ப அழைத்தார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்த மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் ரிஷப் பந்தை சமாதானம் செய்து அமரவைத்தனர். அதுமட்டுமல்லாமல் டெல்லி கேப்பிட்டல்ஸ் துணை பயிற்சியாளர் பிரவிண் ஆம்ரே மைதானத்தில் சென்று நடுவரிடம் பேசினார்.
பொதுவாக ஒரு அணியின் பயிற்சியாளர்கள் இதுபோன்று ஆட்டநேரத்தில் மைதானத்தில் சென்று நடுவரிடம் சென்று பேசுவதும், வாக்குவாதம் செய்வதும் முறையற்றது.
அதுமட்டுமல்லாமல், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர், ரிஷப் பந்திடம் பேச அது வாக்குவாதத்தில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரோமென் பாவெல் அடுத்த இரு பந்துகளிலும் 2 ரன் அடித்து, கடைசிப்பந்தில் ஆட்டமிழந்தார்.
பொதுவாக இதுபோன்ற சர்ச்சைக்குரிய நேரத்தில் கள நடுவர் உடனடியாக மூன்றாவது நடுவர் உதவியை நாடியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன் இடுப்பு உயரத்துக்கு சென்ற பந்து நோ-பாலா அல்லது இல்லையா என்று முடிவு எடுத்திருப்பார்.
ஆனால், பிடிவாதமாக களநடுவர் மூன்றாவது நடுவரிடம் செல்லாதது ஏன் எனத் தெரியவில்லை. இடுப்பு உயரத்துக்கு பந்துவீசப்பட்டாலும், பேட்ஸ்மேன் பாவெல் காலை வளைத்து ஷாட் அடித்ததால் நோபால் வழங்க முடியாது என்று நடுவர் தரப்பில் கூறப்பட்டாலும் சர்ச்சைக்குரிய நேரத்தில் மூன்றாவது நடுவரை நாடியிருக்கலாம்.
What is Pant thinking ? It’s a street game , calling his team back . pic.twitter.com/WDEZvpRnay
— SKS (@TweetSailendra) April 22, 2022
ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் நடுவர் சர்ச்சைக்குரிய முடிவை எடுத்ததால் மைதானத்தில் அமர்ந்திருந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, மைதானத்துக்குள் சென்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தது நினைவிருக்கும். கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனியே கொதிப்பாகிவிட்டார்.
போட்டி முடிந்தபின் டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் அளித்த பேட்டியில் “ 3ஆவது பந்து நோபாலாகியிருந்தால் எங்களுக்கு விலைமதிப்பில்லாததாக மாறியிருக்கும். நோபாலா இல்லையா என்று நாங்கள் ஆய்வு செய்யலாம் என நினைத்தேன். ஆனால், எதுவுமே எங்கள் கைகளில் இல்லை. அதான் எனக்கு வேதனையாக இருந்தது, என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை.
அணியில் உள்ள ஒவ்வொருவரும் அதிருப்தி அடைந்தோம், ஏனென்றால், போட்டி யார் பக்கம் முடியும் என்று தெரியாத சூழலில் பரபரப்பாக இருந்தது. மைதானத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்த்தார்கள். இதுபோன்ற நேரத்தில் மூன்றாவது நடுவர் தலையிட்டு நோ-பாலா என்று ஆய்வு செய்திருக்கலாம். ஆனால், நான் எந்த விதியையும் மாற்றமுடியாது” எனத் தெரிவித்தார்
Win Big, Make Your Cricket Tales Now