
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 275 ரன்கள் குவித்தது. 276 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் ஆசாமின் செயலால் அந்த அணிக்கு 5 பெனால்டி கொடுக்கப்பட்டது. அதாவது, போட்டியில் பாபர் பந்தைக் கையாளும்போது விக்கெட் கீப்பிங் கையுறைகளை பாபர் அசாம் அணிந்திருந்தே அதற்கு காரணம். விளையாட்டு விதிகளின்படி, இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி 276 ரன்கள் இலக்கை துரத்தியபோது இரண்டாவது இன்னிங்ஸின் 29ஆவது ஓவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில், பாபர் ஒற்றை விக்கெட் கீப்பிங் கையுறையை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பந்தை சேகரிப்பதை காண முடிந்தது.