
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.
இதனால் அந்த ஓவரில் வங்கதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அர்ஷ்தீப் சிங் 12ஆவது ஓவரில் ஷகிப் அல் ஹசன், அபீப் ஹோசைன் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதால்தான், இந்தியாவில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்ய முடிந்தது.