
இந்தியாவுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் தொடா்களில் விளையாட இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிகள் டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டி20 தொடரில் விளையாடும் அணியே, அடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் மாற்றமின்றி பங்கேற்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் விளையாடுவதற்காக செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 11 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் காயம் கண்டிருந்த பவுமா, தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு அணிக்குத் தலைமை தாங்குகிறாா்.
உலகக் கோப்பை தொடரைப் பொருத்தவரை, மூத்த பேட்டா் ராஸி வான் டொ் டுசென் காயம் காரணமாக சோ்க்கப்படவில்லை. இளம் வீரா் டிரிஸ்டியன் ஸ்டப்ஸுக்கு முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.