
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பெர்த்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. கான்பெர்ராவில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 424 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூசவுத்வேல்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து 97 ஓவர்களில் 426/4 என்று டிக்ளேர் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114/4 என்று தடுமாற இப்போட்டி டிரா ஆனது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பரிதாபம் என்னவெனில், நியூசவுத்வேல்ஸ் அணியின் கேப்டன் பிளேக் மெக்டொனால்டு என்ற 24 வயது வீரர் 265 பந்துகளில் 177 ரன்களை 15 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் விளாசினார். மற்றொரு வீரரான ஒலிவர் டேவிஸுக்கு வயது 22 மட்டுமே, இவர் 106 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து விளாசித்தள்ள, ஜஸ்டின் அவென்டனோ என்ற வீரர் 54 ரன்கள் எடுத்தார்.