
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அந்த அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேபாள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் இவ்விரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடர் செப்டம்பர் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியானது நேபாள் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தது. இதனையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதிபெற்றுள்ள நிலையில், நேபாள் அணியானது தகுதிச்சுற்றின் அடிப்படையில் தகுதிபெரும் வாய்ப்பில் உள்ளது.