
எட்டாவது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று (16ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
இந்த 8 அணிகளும் 22ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ், 2014ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.
அதன்படி தொடரின் இரண்டாம் நாளான நாளை ஹாபர்ட்டில் நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்னதாக இருமுறை டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற்ற வலுவான அணிகளில் ஒன்றாக இருந்தாலும், சமீப காலமாக அந்த அணியின் வெற்றி சதவிகிதம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.