அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது - சூர்யகுமார் யாதவ் குறித்து கிளென் பிலீப்ஸ்!
சூரியகுமார் யாதவ் போல தம்மால் கனவிலும் நாலாபுறங்களிலும் அடிக்க முடியாது என்று நியூசிலாந்து அதிரடி கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இந்தியா அரையிறுதி வரை செல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.
அதில் தென் ஆபிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலியையும் மிஞ்சும் வகையில் வேறு ஏதோ பேட்டிங் பிட்ச்சில் விளையாடுவது போல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்த சூரியகுமார் யாதவ் தற்சமயத்தில் இந்திய டி20 அணியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் சரவெடியாக செயல்பட்டு ரன்களை குவித்து வரும் அவர் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் உச்சத்தையும் தொட்டுள்ளார்.
Trending
அதை விட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்கும் சூப்பர் ஸ்டார் அணுகுமுறையை பின்பற்றும் அவர் எப்போதுமே அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்களில் அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்தாதவராக உள்ளார். அந்த அணுகு முறையில் பெரும்பாலும் பெரிய ரன்களை குவிக்கும் அவர் மைதானத்தில் நாலாபுறமும் சுழன்றுடித்து இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ஜாம்பவான்கள் போற்றும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் சூரியகுமார் யாதவ் போல தம்மால் கனவிலும் நாலாபுறங்களிலும் அடிக்க முடியாது என்று தெரிவிக்கும் நியூசிலாந்து அதிரடி கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் பெரிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியவிலேயே வெளுத்து வாங்கிய அவர் சிறிய மைதானங்களை கொண்ட தங்களது நாட்டில் நடைபெறும் இந்த டி20 தொடரில் இன்னும் அதிரடியாக விளையாடுவார் என்று பாராட்டியுள்ளார்.
பேசிய கிளென் பிலீப்ஸ், “சூர்யகுமார் யாதவ் நிச்சயமாக அபாரமானவர். அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது. அவரைப் போல் விளையாட விரும்பினாலும் நாங்கள் இருவரும் வெவ்வேறானவர்கள்.அவர் தம்மிடம் உள்ள மணிக்கட்டு பலத்தை வைத்து நாம் எதிர்பாராத திசைகளில் அசால்டாக சிக்ஸர்களை அடிக்கிறார். அவரைப் போன்ற திறமை மிகவும் அரிதாகும். இருப்பினும் அவர் அவருடைய பலத்தில் விளையாடுகிறார்
நான் என்னுடைய பலத்தில் விளையாடுவதால் நாங்கள் இருவரும் வெவ்வேறு வேலைகளை செய்கிறோம். நாங்கள் இருவரும் விளையாடும் மிடில் ஆர்டரில் எதிரணியினரும் எங்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. இது டி20 போட்டிகளில் மிடில் ஆர்டர் கிரிக்கெட்டின் ஆபத்து மற்றும் வெகுமதியின் ஒரு பகுதியாகும்.
மேலும் ஆஸ்திரேலியாவில் விளையாடியதை விட இந்த டி20 தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் இன்னும் அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். ஏனெனில் இங்குள்ள மைதானங்கள் சற்று சிறியதாக இருப்பதுடன் இங்குள்ள பிட்ச்கள் லேசான புற்களுடன் பேட்டிங்க்கு சாதகமாக பவுன்ஸ் ஆகும். எனவே அவருடைய பேட்டிங்கை இங்கு நாம் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now