
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரிலேயே மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அலிக் அதானாஸ் 22 ரன்களிலும், பிராண்டன் கிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 45 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அண்இ 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் கேப்டன் ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் கூட்டணி சிறிது நேரம் விக்கெட் கொடுக்காமல் விளையாடியது. சிறிய பார்ட்னர்ஷிப் உருவாகிய நிலையில், ஜடேஜா பந்தில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஹெட்மையர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பவல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவின் ஆரம்பமானது. இதன்பின் வந்த வீரர்கள் சீட்டு கட்டைப் போல் சரிந்தனர்.