WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். பின் 25 ரன்கள் எடுத்திருந்த கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய ஜான்சன் சார்லஸும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை அச்சுருத்தினார். அதன்பின் 20 ரன்களுக்கு பூரன் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோவ்மன் பாவெல் 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now