WI vs PAK: விண்டீஸை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிளெட்சர் டக் அவுட்டானார். எவின் லூவிஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய கிறிஸ் கெயில் 16 ரன்களும், ஹெட்மயர் 17 ரன்களும், பொல்லார்டு 13 ரன்களும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் நம்பிக்கையை வழங்கினார்.
இருப்பினும் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் நிக்கோலஸ் பூரன் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஹபீஸுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now