
ஐபிஎல் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் வரவிருக்கும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடர் முழுமையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளன. இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்த பின் வீரர்கள் அனைவரும் பயோ பபுள் சூழலுக்கு வரவிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில், வீரரர்களின் மெகா ஏலம் முடிந்தது. அந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஃபாஃப் டு பிளெசிஸை ரூ.7 கோடிக்கு வாங்கியது. இவர் தற்போது அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்து பார்மெட்களிலும் கேப்டன் பொறுப்பை துறந்த நிலையில் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, கோலி மற்றும் ஷேன் வாட்சன் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஏழாவது கேப்டனாக ஆகியுள்ளார் டு பிளெசிஸ்.