
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 2 பகுதிகளாக நடைபெறும் இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அதில் அசத்தலாக செயல்பட்ட அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதைத் தொடர்ந்து இந்த தொடரின் நாக் அவுட் சுற்றின் முதல் பகுதியான காலிறுதிப் போட்டிகள் கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அழுர் நகரில் நடைபெற்ற 2ஆவது காலிறுதி போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பையை கத்துக்குட்டியான உத்தரகாண்ட் எதிர்கொண்டது.
அப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த மும்பை முதல் இன்னிங்சில் 647/8 ரன்களும் 2-வது இன்னிங்சில் 261/3 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆனால் மும்பையின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத உத்தரகாண்ட் முதல் இன்னிங்சில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2ஆவது இன்னிங்சில் அதைவிட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 69 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 725 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மும்பை ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக உலக சாதனை படைத்தது.