மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோடம்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
Trending
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரைஇறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 3ஆவது இடம் பெற்றது. அந்த அணி அரைஇறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பழிதீர்த்து 5ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (215 ரன்கள்), ஷபாலி வர்மா (161 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (13 விக்கெட்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (7 விக்கெட்), ஸ்நே ராணா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா (201 ரன்கள்), நிலாக்ஷி டி சில்வா (124) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரனவீரா (12 விக்கெட்) கலக்கி வருகிறார்.
ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. மற்றபடி இறுதி சுற்றில் இந்தியா தோல்வியே சந்தித்தது கிடையாது. மேலும், லீக் ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருப்பதால், இறுதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி 7ஆவது முறையாக கோப்பையை வெல்லும் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக உள்ளது.
அதே நேரத்தில், அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை ஆடவர் அணி மகுடம் சூடியது போல், இலங்கை பெண்கள் அணியும் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now