மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸ் த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக அந்த அணி வீராங்கனை ஷீமைன் காம்பெல் 53 ரன்கள் அடித்தார்.
மற்றொரு வீராங்கனை ஷார்லின் பிளெட்சர் 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒன்றை இலக்க ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி ஹேலே மேத்யூஸ், ஃபிளட்சர் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் வங்கதேச அணி கடைசி ஓவரில் வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்ததால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இறுதியில் வங்கதேச அணி 136 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹேலே மேத்யூஸ் 4 விக்கெட்டுகளையும், ஃபிளட்சர், ஸ்டிஃபானி டெய்லர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now