சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மோரிஸ் ஓய்வா?
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மிக பலமான அணியாக வலம் வந்த தென்ஆப்பிரிக்காவில் தற்போது பல குழப்பங்கள் நடந்து வருகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் தற்போது சர்வதேச போட்டியில் வேண்டுமென்றே களமிறக்கப்படாமல் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்க அணியின் சீனியர் வீரர்களான டூபிளசிஸ், இம்ரான் தாஹீர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு பெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த டூபிளெசிஸுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னை எனக்கூறப்படுகிறது.
Trending
இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மோரிஸ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அதில் அவர், “அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று கூறுபவன் கிடையாது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணிக்காக நான் இனி கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்பது உறுதி. என்னுடைய நிலைபாடு என்ன என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். அந்தவகையில் இனி நான் விளையாட மாட்டேன் என அவர்களுக்கு புரிந்து இருக்கும்.
என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவடைந்தது. இனி நான் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். பலரிடமும் எனது முடிவு குறித்து ஆலோசித்துவிட்டேன். அதன் பிறகு தென்ஆப்பிரிக்க வாரியத்திடம் நான் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ் இதுவரை 43 ஒருநாள் போட்டிகள், 23 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது மோரிஸ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
சர்வதேச போட்டிகளில் மவுசு குறைந்தாலும், ஐபிஎல் தொடரில் கிறிஸ் மோரிஸுக்கான மவுசு மிக அதிகம். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றவர் கிறிஸ் மோரிஸ் தான். ஐபிஎல் 2021 ஏலத்தின் போது கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now