WTC 2023 Final: டிராவிஸ் ஹெட் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கவாஜா , வார்னர் களமிறங்கினர். தொடக்கத்தில் சிராஜ் பந்துவீச்சில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் லபுஷாக்னே களம் புகுந்தார். அவர் டேவிட் வார்னருடன் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் வார்னர் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் 43 ரன்களில் வெளியேறினார்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்தது. அதன்பின் இரண்டாவது செஷனைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷாக்னே 26 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 60 ரன்களுடனுடம் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now