WTC Final, Day 1: பந்துவீச்சில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷாக்னே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் உஸ்மான் கவாஜா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து லபுஷாக்னேவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
இதன் காரணமாக இந்த இறுதிப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 67 ரன்களை மட்டுமே எடுத்துள்ள நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now