சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச அணி, ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 7ஆம் தேதி ஹராரேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி மஹ்முதுல்லாவின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸ்ல் 468 ரன்களை எடுத்து வலிமையான நிலையில் இருந்தது.
Trending
அதனைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்களில் ஆல் அவுட்டானாலும், ஃபாலோ ஆனை தவிர்த்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் 150 ரன்களை விளாசி வங்கதேச அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள முகமதுல்லா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சக வீரர்களிடம் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த நபர் கூறுகையில்,“ஆம், இந்த ஆட்டத்திற்குப் பிறகு தனது டெஸ்ட் வாழ்க்கையை நீடிக்க விரும்பவில்லை என்று மஹ்முதுல்லா தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எதையும் அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச டெஸ்ட் அணிக்காக 2009ஆம் ஆண்டு அறிமுகமான மஹ்முதுல்லா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 16 அரைசதங்கள் உள்பட 2,764 ரன்களை குவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now