ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 03) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு பியூ வெப்ஸ்டர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அனால் இப்போட்டியில் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்..