
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவில் உள்ள 13 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்யும் அணிகள் எது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே போர் பதற்றமானது உருவாகியுள்ளது. முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் ஏவுகனை தாக்குதலை நடத்தியது. இதனைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கொண்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் மே 11ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படுவாதாகவும், தளவாடச் சிக்கல்கள் காரணமாக இடம் இந்த மாற்றம் அவசியமாகியுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் அறிவித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியானது இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கும் என்பதையும் பிசிசிஐ உறுதிசெய்துள்ளது.