இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்க்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இக்கிலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது 2-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கே), ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக்(கே), ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித்