இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இத்தொடர் நடைபெறவுள்ளதால் இதனைப் பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது.
அதற்கு தயாராகும் வகையில் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்தே உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படும் என்பதால் அந்த தொடரில் இடம் பெறாத வீரர்கள் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக நான் இருந்த கட்டத்திற்கு வர விரும்புகிறேன். அப்பொழுது நான் சிறந்த மனநிலையில் இருந்தேன். தொடருக்கு முழுமையாகத் தயாராகிவிட்டேன். நான் அப்பொழுது இருந்த நல்ல நிலை மற்றும் நல்ல மனநிலையை மீண்டும் இப்பொழுது கொண்டு வர விரும்புகிறேன். அதைச் செய்ய எனக்கு நேரம் இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் நான் செய்த சரியான விஷயங்களை நினைவு படுத்த முயற்சிக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய சிந்தனை மற்றும் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை நான் என்னை எப்படி நிதானமாக வைத்துக் கொள்கிறேன் என்பது முக்கியம். வெளியில் நடக்கும் விஷயங்களைப் பற்றி இந்த கவலையும் படாமல், எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட நினைக்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களில் எனது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.