இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ், டிம் சௌதீ, மிட்செல் சான்ட்னர், அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ ரூர்க்.