பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரையும் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், சோயிப் பஷீர்.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷஃபீக், ஷான் மசூத் (கே), காம்ரன் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், அமீர் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத்