இந்தியாவில் நடத்தப்படும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேசமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் முக்கிய வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடித்திருந்த திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா போன்றோரும் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணைக்கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர்.