ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. அதிபட்சமாக ரிஷப் பந்த் 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணியில் மஹ்முதுல்லா 40 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாம் காயமடைந்து களத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஷொரிஃபுல் இஸ்லாம் வீச அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹர்திக் பாண்டிய பவுண்டரி அடிக்க முயற்சித்து வேகமாக அடித்தார். அப்போது பந்துவீசிய கையோடு ஷொரிஃபுல் இஸ்லாம் பந்தை தடுக்க முயற்சித்த போது காயமடைந்தார்.
அதன்படி வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தைவிட்டு வெளியேறினார். பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தை தன்ஸிம் ஹசன் வீசினார். இந்நிலையில் ஷொரிஃபுல் இஸ்லாமின் காயம் குணமடைய ஒருவராத்திற்கு மேலாகும் என தகவல் வெளியாகியுள்ளதால், அவரால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. ஒருவேளை அவரால் காயத்திலிருந்து மீளமுடியாமல் போனால் ரிஸர்வ் வீரராக உள்ள ஹசன் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.