
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதியும் கூடிய விரைவில் பிசிசிஐ தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேற்கொண்டு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்காப்படுகிறது. முன்னதாக நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் மைதானத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதனால் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மைதானத்தில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்துள்ளது.