
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி ஃபுளோரிடாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணியில் ஹென்ரிச் கிளாசென் 48 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டவில்லை. இதனால் அந்த அணி 17.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வாஷிங்டன் அணி தரப்பில் சௌரவ் நேத்ரவல்கர், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் அணியில் தொடக்க வீரர் மிட்செல் ஓவன் 6 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திராவும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய முக்தார் அஹ்மத் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 9.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த தோல்வியின் காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.